இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாக்லேட் விரல் விவகாரம்; இன்று அறிக்கை சமர்ப்பிப்பு!

0
274

கொழும்பு – மஹியங்கனை வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லெட் ஒன்றில் காணப்பட்ட மனித விரல் தொடர்பில் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இன்று (07) அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 03 ஆம் திகதி வைத்தியசாலையின் பெண் ஊழியர் ஒருவர் சொக்லெட்டை கொள்வனவு செய்து அதில் ஒரு பகுதியை சாப்பிட்டு மீதியை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.

அதிர்ச்சியில் ஆடிப்போன ஊழியர்

அதன் பின்னர் நேற்றுமுன்தினம் (05) மீண்டும் சாப்பிட்ட போது ஏதோ கடினமாக இருந்துள்ளதை அவதானித்துள்ளார். குறித்த சொக்லெட் “பழம் மற்றும் விதை” (Fruit & Nut) வகையைச் சேர்ந்தது என்பதால் அது உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நினைத்து கடிக்கும்போது அது கடிபடவில்லை.

இதனையடுத்து அந்தப் பகுதியை எடுத்து நீர் குழாயில் பிடித்துக் கழுவிய போது, அது மனித விரல் என தெரிந்ததை அடுத்து அப்பெண் உரக்கக் கத்தி அருவருப்பினால் அவர் வாந்தி எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சொக்லெட் விரல் விவகாரம்; இன்று அறிக்கை சமர்ப்பிப்பு! | A Human Finger In Chocolate Issue

சக ஊழியர்கள் நடந்ததை கேட்டு வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இது பற்றி அறிவித்ததை அடுத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு (MOH) அவர்கள் அறிவித்துள்ளனர். விசாரணையின் போது அது நகத்துடன் கூடிய மனித விரலின் ஒரு துண்டு என உறுதிப்படுத்தப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உடனடி விசாரணை

அதற்கமைய, குறித்த விரலின் உரிய பகுதியையும் அதில் இருந்ததாக கூறப்படும் சொக்லெட் பொதியையும் அதனுடன் இணைந்த அனைத்து தொகுதியையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து இன்றையதினம் (07) சம்பவத்துடன் தொடர்புடைய சொக்லெட் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக மஹியங்கனை நீதிமன்றில் அறிக்கையிட்டு அதன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்க மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சொக்லெட் விரல் விவகாரம்; இன்று அறிக்கை சமர்ப்பிப்பு! | A Human Finger In Chocolate Issue

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சஹான் சமரவீரவின் ஆலோசனையின் பேரில், பொதுச் சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை சொக்லெட்டில் மனித விரல் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.