தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள் பிரகடனம்: வெளியான அறிவிப்பு

0
187

ஜூலை -25 ஆம் திகதியை ‘உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள்’ ஆக பிரகடனம் செய்வதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சாவினைத் தழுவிய தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நிகழ்வு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (31.07.2023) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – குருநகர் புதுமை மாதா தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள குரலற்றவர்களின் குரல் பணியிடத்தில் குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

பயங்கர வாதத் தடைச் சட்டம் 

இது தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சாவினைத் தழுவிய தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையும் காரணங்களும் காலத்திற்குக் காலம் வேறுபடுகிறது.

அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாதத்தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் சந்தேகத்தின் பெயரில் பால்,வயது வேறுபாடின்றி கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள், இனத்தின் பெயரில் வஞ்சிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டவர்களாவர்.

கொடூரமாக சாகடிக்கப்பட்டார்கள்

இவ்வாறு சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் திட்டமிடப்பட்ட சிறைக்கலவரங்களாலும் நோய்வாய்ப்பட்ட நிலையில் போதிய மருத்துவ பராமரிப்பின்றியும் சிறையின் நான்கு சுவர்களுக்குள்ளேயே நீதியின்றி பரிதாபகரமாக கொல்லப்பட்டுள்ளார்கள்.

1983ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட ஜூலை கலவரத்தின்போது, வெலிக்கடை சிறையின் அதியுயர் பாதுகாப்புப் பிரிவுக்குள் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட்ட 54 தமிழ் அரசியல் கைதிகள் அரசின் கைக்கூலிகளால் சிறைக் கொட்டடிகளுக்குள்ளேயே கதறக் கதற கொன்றொழிக்கப்பட்டார்கள்.

அதேபோன்று, 1987இல் பூசா தடுப்பு முகாமில் 9 தமிழ் அரசியல் கைதிகளும், 1997 இல் களுத்துறை சிறையில் 5 தமிழ் அரசியல் கைதிகளும் கொடூரமாக சாகடிக்கப்பட்டார்கள்.

சிறைப் பிடிக்கப்பட்டவர்கள்

2001ஆம் ஆண்டில் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம்மீது இனவெறிகொண்ட காடையர்கள் நடாத்திய மிருகத்தனமான தாக்குதலில் 27 தமிழ் அரசியல் கைதிகள் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

2012இல் வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் சிறையதிகாரிகளாலும் விஷேட அதிரடிப்படையினராலும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவைமட்டுமல்ல, யுத்த காலங்களில் சிறைபிடிக்கப்பட்டவர்கள், நீண்ட நெடுங்காலமாகக் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் பலர் உடல் உள தாக்கங்களாலும் போதிய மருத்துவம் மற்றும் போஷாக்கான உணவின்மையாலும் நோய் நொடிகளுக்கு ஆளாகி சிறைக்குள் சாவடையும் பெருந்துயரம் அண்மைக்காலம் வரை இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

நினைவேந்தல் நாள்

இவ்வாறு நீண்டுசெல்கின்ற சிறைக்கொடுமைகளின் பட்டியலில், அங்க இழப்புகளுடனும் விழுப்புன்களுடனும் தப்பிப் பிழைத்து, இப்பூமிப் பந்தின் எங்கோர் மூலையில் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எவ்வாறாயினும், ஒரு இனச்சமூகத்தின் பெயரில் சிறையிலடைக்கப்பட்டு வஞ்சகமாக கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நினைவு கூறப்பட்டு தமிழர் எம் வறலாற்றாவனங்களில் இவர்களது சம்பவங்களும் சாவுகளும் சான்றாதாரங்களாகப் பொறிக்கப்படவேண்டும்.

அந்தவகையில், ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பானது, ஆண்டுதோறும் வருகின்ற ஜூலை -25 ஆம் திகதியை ‘உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள்’ என பிரகடனம் செய்து அதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது என்றுள்ளது.