ரணிலுடனான பேச்சு அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சி: தமிழ் தரப்பு மீது கொந்தளிக்கும் சுகாஸ்

0
171

ரணில் விக்ரமசிங்கவினுடைய கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே நாங்கள் செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆன கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (19.07.2023) தனியார் ஊடகம் ஒன்றுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையில் எங்களைத் தவிரத் தமிழ்த் தேசியம் பேசுகின்ற அனைத்து கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்று ரணில் விக்ரமசிங்கவையும் இலங்கையையும் சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச அமைப்புகளிடமிருந்து காப்பாற்றி இலங்கைக்குக் கடன் பெற்றுக் கொடுத்துவிட்டு இன்றைக்குத் தமிழினத்தின் எதிர்கால இருப்பு இல்லாமல் மூழ்கடித்திருக்கின்றார்கள் என்று தான் கூற வேண்டும்.

அரசை காப்பாற்றும் முயற்சியே ரணிலுடனான பேச்சுவார்த்தை: தமிழ் தரப்பு மீது கொந்தளிக்கும் சுகாஸ் | Tamil National People S Front Ranil Meeting

13ஆவது திருத்தசட்டம்

தங்களைப் பொறுத்தவரையில் இத்தகைய பேச்சு வார்த்தைக்கு நிபந்தனை இல்லாமல் செல்வது அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு முயற்சியாகத் தான் அமையும். நாங்களும் தமிழ் மக்களும் சமஷ்டிக்குக் குறைந்த எந்த ஒரு தீர்வையும் எண்ணிப் பார்ப்பதற்குக் கூட தயார் இல்லை.

ரணில் விக்ரமசிங்கவோடு தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றைய தமிழ்த் தேசிய ஜனநாயகக் கூட்டணி போன்ற காட்சிகள் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது திருத்தத்தைப் பற்றி கதைக்குச் சென்றது மிகவும் பிழை.

இது தமிழ் மக்களுக்குச் செய்த ஒரு வரலாற்றுத் துரோகம். ஆகவே இப்பொழுது சமஷ்டி கோரிக்கையைக் கைவிட்டு விட்டு ஒற்றை ஆட்சிக்குக் கீழ் கதைக்கப் போனவர்களுக்கு ரணில் விக்ரமசிங்க செருப்பால் அடித்துத் துரத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இனியாவது திருந்திக் கொள்ளுங்கள்

பொலிஸ் அதிகாரத்தை, காணி அதிகாரத்தை தர முடியாது என்று சொல்லி இருக்கின்றார். ஆகவே இந்த தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளிடம் வினையமாக விடுக்கின்ற கோரிக்கை என்னவென்றால் இனியாவது திருந்திக் கொள்ளுங்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு நடடந்து கொள்ளுங்கள்.

மீண்டும் மீண்டும் போய் ரணில் விக்ரமசிங்கமையும் ராஜபக்சகளையும் சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றிவிட்டு தமிழினத்தை மீண்டும் மீண்டும் அடகு வைக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.