கீரிமலை நகுலேஸ்வரர் ஆதீனகர்த்தா நகுலேஸ்வர குருக்கள் காலமானார்

0
240

ஈழத்தின் பஞ்சஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் ஆதீனகர்த்தா ராஜராஜஶ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள் (வயது 98) இறையடி சேர்ந்தார்.

நேற்று(15.07.2023) காலமான அவருடைய இறுதி யாத்திரை இன்று (16.07.2023) பி.ப 3.00 மணியளவில் நகுலேஸ்வரத்திலிருந்து ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக பல வருடங்கள் நித்திய பூசை வழிபாடுகள் இன்றி அழிவடைந்த நிலையில் காணப்பட்ட ஆலயத்தை, நகுலேஸ்வரக்குருக்களின் அயராத முயற்சியினால் 2009ம் ஆண்டு முதல் ஆலயத்திற்கு சென்றுவர அடியவர்களுக்கு அனுமதி வாங்கி கொடுக்கப்பட்டது.

சிறப்பு பட்டம்

திருக்கைலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத்தின் நட்சத்திர குருமணிகள், ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் சிறப்புக் கௌரவத்துடன் “சிவாகம கலாநிதி” எனும் சிறப்புபட்டம் தருமையாதீனத்தினால் நகுலேஸ்வர ஆதீன கர்த்தா இராஜராஜ ஸ்ரீ.நகுலேஷ்வரக்குருக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் இந்த விருதுக்கான பட்டயமும் தங்கப்பதக்கங்களும், பொற்கிளியும் நகுலேஷ்வரக்குருக்களுக்கு அவரது இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டு தை மாதம் சிவ ஸ்ரீ.நகுலேஷ்வரக்குருக்கள் பொறுப்பில் ஆலயத்தில் குடமுழுக்கு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.