பிரான்ஸ்-ஜெர்சி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இவ்வருட இறுதிக்குள் நிறுவப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரான்ஸின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸூக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றிளை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, பாரீஷில் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
கடந்த 2011ஆம் ஆண்டு பிரான்ஸில் உள்ள தமிழ் கலாச்சார மன்றம், அரச அனுமதியுடன் காந்தியின் முழு உருவ வெண்கலச்சிலையை அமைத்தது.
அதேபோல், தற்போது அரச அனுமதியுடன் ஜெர்சி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை செப்டம்பர் மாதம் நிறுவப்படவுள்ளது.
வெண்கலத்தில் 7 அடியில் 600 கிலோ எடையில் பிரம்மாண்டமாக இந்த திருவள்ளுவர் சிலை உருவாகியுள்ளது.
குறித்த சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான கலை பிரிவில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் சிலை திறப்பு விழாவையொட்டி பிரான்ஸில் செப்டம்பரில் திருவள்ளுவர் மாநாடும் இடம்பெறவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிலையின் நிர்மாணப்பணிகள் மூன்று மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில், விமானத்தின் மூலம் குறித்த சிலை பிரான்ஸூக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனை பிரதமர் மோடி பார்வையிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.