குதிரைக்கு முடி வெட்டினால் தினமும் 1 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம் என்றால் நம்ப முடிகின்றதா. ஆனால் நம்பத்தான் வேண்டும். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் முடிவெட்டி நாளொன்றுக்கு ஒரு லட்சம் சம்பாதிக்க முடியும்.
பொதுவாக ஐக்கிய அரபு அமீரக நாடுகள், சௌதி அரேபியா, கத்தார், ஈரான், குவைத் ஆகிய நாடுகளில் குதிரை என்பது பெரும் செல்வந்தர்களின் கௌரவமிக்க செல்வமாகக் கருதப்படுகிறது.
அங்கு ஒருவர் எவ்வளவு அம்சமான குதிரையை வைத்திருக்கிறார் என்பதைப் பொருத்து அவருக்கான வசதி, அந்தஸ்து போன்றவற்றை பிறர் மதிப்பிடுகின்றனர்.
குதிரை அழகாக இருக்க வேண்டும் என்றால் நல்ல ஊட்டச்சத்து உணவை கொடுத்து போஷாக்காக வளர்த்திருந்தால் மட்டும் போதாது. அதன் முடியும் அழகாக இருக்க வேண்டும்.
ஒரு குதிரைக்கு முடி வெட்ட 150 டாலர்கள்
அதாவது அளவுக்கு அதிகமாக வளரும் முடியை கனக்கச்சிதமாக நறுக்கி ஸ்டைல் செய்துவிட வேண்டும். ஆனால், எல்லோராலும் இதை அவ்வளவு சுலபமாக செய்துவிட முடியாது.
அந்த நாடுகளில் குதிரைகளுக்கு முடி வெட்டும் பணியாளர்கள் கிடைப்பது மிக அரிது. அதனால் அதற்கான ஊதியமும் அதிகம். ஒரு குதிரைக்கு முடி வெட்டினால் சுமார் 150 டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுகிறதாம்.
அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 12 ஆயிரம் ரூபாய் ஆகும். நல்ல கை தேர்ந்த தொழில்முறை பணியாளர் என்றால் ஒரு குதிரைக்கு முடி வெட்டுவதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். சராசரியாக நாளொன்றுக்கு 10 குதிரைகளுக்கு முடி வெட்டிவிடும் பட்சத்தில் 1.20 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.
குதிரையின் முதுகு, கழுத்து மற்றும் வால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முடியை மிக நேர்த்தியாக வெட்டிவிட வேண்டுமாம்.