சஜித், ரஞ்சித்துக்கு எதிராக டயானா மனு; நீதிமன்ற அறிவிப்பு!

0
279

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவின் விசாரணையின்போது பிரதிவாதிகள் விடுத்த கோரிக்கைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று அழைக்கப்பட்டபோது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் தங்கள் ஆட்சேபனைகளை முன்வைக்கவிருந்தனர்.

இந்நிலையில் அவர்களின் சட்டத்தரணிகள், தங்கள் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான திகதியை நிர்ணயிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினர். இந்த கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம், பிரதிவாதிகள் தங்கள் ஆட்சேபனைகளை மே 22ஆம் திகதி தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இரு அரசியல்வாதிகளும் கட்சியில் பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் என தீர்ப்பளித்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கமகே தனது மனுவில் கோரியுள்ளார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் படி, வேறொரு அரசியல் கட்சியின் உறுப்பினர் கட்சியின் உறுப்பினராக இருக்க முடியாது என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் பதவிகளை வகிப்பது சட்டவிரோதமானது என்று மனுதாரரான டயானா கமகே குறிப்பிட்டுள்ளார்.