நான்கு நாள் கழிவறைக்குள் தவித்த 31 வயது பெண்; தட்டியும் பலனில்லை

0
361

புக்­கிட் தீமா­வில் உள்ள பியூட்டி வேர்ல்ட் அருகே இரண்டு மாடி கூட்­டு­ரிமை உச்சிமாடி வீட்­டில் தனியாக வசித்து வரும் திரு­வாட்டி யாங் என்ற 31 வயது சிங்­கப்­பூர் மாது, தன்­னு­டைய வீட்டு கழி­வறைக்கு உள்­ளேயே நான்கு நாள்­க­ளாக அடைபட்டுவிட்டார்.

வெறும் தண்­ணீர்தான் அவருக்குக் கிடைத்­தது. தூக்­கம் வந்­த­போது கழி­வ­றைத் தொட்­டி­யில் அமர்ந்­த­ப­டியே தூங்­கி­னார். கைப்­பே­சி­யும் அப்­போது அவ­ரி­டம் இல்லை. அது வீட்டின் கழிவறைக்கு வெளியே இருந்தது.

திரு­வாட்டி யாங் தன்­னு­டைய முழு பெய­ரைத் தெரி­விக்க மறுத்து­விட்­டார். அவ­ரு­டைய வீட்­டுக் கழி­வறை­யில் சன்­னல் கிடை­யாது.

கத­வின் தாழ்ப்­பாள் பிடி உடைந்து­போய் கோளா­றாக இருந்­த­தால் திறக்க முடி­யா­மல் கதவு மூடிக் கொண்­டு­விட்­டது.

நாலா­பு­ற­மும் சுவரை இடித்­துப் பார்த்­தும் பலன் இல்லை. அந்த மாதின் உற­வி­னர்­கள் சீனா­வில் இருக்­கி­றார்­கள். அன்­றா­டம் அவர் பெற்­றோ­ருக்கு குறுஞ்­செய்தி அனுப்­பு­வார்.

சில நாள்­க­ளாக குறுஞ்­செய்தி கிடைக்­கா­மல் போனதை அடுத்து நிச்­ச­யம் தன்­னு­டைய பெற்­றோர்­ செய­லில் இறங்­கு­வார்­கள் என்ற நம்­பிக்­கை­யு­டன் அவர் இருந்­தார்.

ஆனா­லும் நான்கு நாள்­கள் உள்­ளேயே தவிக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டு­விட்­டது.

அன்­றா­டம் கழி­வ­றைக் கதவை வேக­மாக தட்­டு­வார். யாருக்­கா­வது சத்­தம் கேட்­கும் என்ற நம்­பிக்­கை­யில் குறிப்­பாக காலை வேளை­யில் வேகமாகக் கத­வைத் தட்­டு­வார்.

வீட்­டின் கதவு மணி ஒலிக்­கும் போதெல்­லாம் வேக­மா­கத் தட்­டு­வார். கழி­வ­றைக்­குள் இருந்­த­போது தன் குடும்­பம், வேலை, எதிர்­காலத்­தில் இது­போன்ற சூழ்­நி­லை­களை எல்­லாம் எப்­படி தவிர்த்­துக்கொள்­ள­லாம் என்­பது பற்­றிய சிந்­தனை ஆகி­ய­வை­தான் அவ­ரு­டைய மனதில் இடம்­பெற்­றன.

கழி­வ­றைக்கு வெளியே அவர் செல்­ல­மாக வளர்த்து வரும் கிளி குரல் கொடுத்து பாடு­வ­தைக் கேட்­கும் போதெல்­லாம் அவ­ரின் மனம் ஒரு மாதி­ரியா­கப் போய்­வி­டும்.

ஆனால் கிளி பாடி­யதும் இவர் தட்­டி­ய­து­ம்தான் மிச்­சம்.

கடை­சி­யாக அந்த மாதைக் காண­வில்லை என்று நவம்­பர் 27ஆம் தேதி காவல்­து­றைக்கு அவரின் உற­வி­னர் ஒரு­வர் தக­வல் தெரி­வித்­தார். அதி­கா­ரி­கள் அவர்­வீட்­டிற்­குச் சென்று பாது­கா­வ­லர் ஒரு­வ­ரின் உத­வி­யு­டன் வீட்­டின் உள்ளே போய் பல­வந்­த­மாக கழி­வறைக் கதவைத் திறந்தனர்.

அந்த மாது அணிந்­து­கொள்ள துண்டு, உடை­க­ளைக் கொடுத்­தனர். வெளியே வந்து பார்த்தபோது அவ­ரு­டைய வீட்­டிற்கு வெளியே பல பார்­சல்­கள் கிடந்­தன.

கைப்பே­சி­ அணைந்து போய் இருந்­தது. அதில் மின்­சக்­தியை ஏற்றி பார்த்­த­போது 40 குறுஞ்­செய்தி­கள் குவிந்துகிடந்தது தெரி­ய­வந்­தது.

கழி­வ­றை­யில் இருந்து மாது வெளியே வந்­த­தும் மருத்­து­வர்­கள் சோதித்­த­னர். அவ­ருக்கு எந்த பாதிப்­பும் இல்லை. முதல் காரி­ய­மாக அவர் தன் பெற்­றோ­ருக்கு நடந்­த­தைக் கூறி தான் பாது­காப்­பாக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார். பிறகு சாப்­பிட்­டார்.

கழி­வ­றை­யில் தனி­யாக ஒரு கைப்பேசி அல்­லது நவீன தொலை­பேசிக் கடி­கா­ரம் ஒன்றை இனி வைத்­து­விட வேண்­டும் என்று அவர் திட்­ட­மி­டு­கி­றார். “இனி என் வாழ்­நா­ளில் கழிவறைக் கதவை முற்றி­லும் மூடவேமாட்­டேன்,” என்று திரு­வாட்டி யாங் கூறி­னார்.