புலமைப்பரிசில் பரீட்சையை எழுதிவிட்டு நேற்றைய தினம் வீடு திரும்பிய மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கடத்தப்பட்ட அச் சிறுமியை காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டு சென்றுள்ளதாக அம்பன்பொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து தனது நண்பர்களுடன் சிறிய வாகமொன்றில் அமுனுகம சந்திக்கு மாணவியொருவர் சென்றுள்ளார்.
இதன் பின்னர் மாணவி அமுனுகமவில் இறங்கி தனது வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து அழைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து வீட்டின் அருகே சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி வீட்டை பார்த்ததும் வேறு திசையில் வாகனத்தை திருப்பி மாணவிக்கு பாடசாலை உபகரணங்களை வாங்கி தருவதாகக் கூறி அம்பன்பொல, எஹதுவே வீதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதன்போது பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மற்றுமொரு மாணவனை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் குறித்த மாணவியை காட்டு பகுதிக்கு அழைத்துச்சென்று இறக்கி விட்டு தப்பியோடியுள்ளார்.
இதனை அவதானித்த பாடசாலை மாணவர் மற்றும் வீதியில் பயணித்த இருவர் சிறுமியை கண்டு விசாரித்து, கிராம மக்களின் உதவியுடன் சிறுமியின் தந்தையை அவ்விடத்திற்கு வரவழைத்து சிறுமியை ஒப்படைத்துள்ளனர்.