சிகரெட் வாங்குவதற்கு தடை விதித்த நியூசிலாந்து

0
378

இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிப்பதன் மூலம் புகைபிடிப்பதை படிப்படியாக நிறுத்துவதற்கான தனித்துவமான திட்டத்தை நியூசிலாந்து நாடு சட்டமாக்கி உள்ளது.

2009 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலையை விற்கக் கூடாது என்று இந்தச் சட்டத்தில் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தடை 2009ஆம் ஆண்டு மற்றும் அதற்கு பின் பிறந்த அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் தொடரும் வகையில் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது காலப்போக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

சிகரெட் வாங்குவதற்கு தடை விதித்த நாடு | Country That Has Banned The Purchase Of Cigarettes

கோட்பாட்டளவில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பாக்கெட் சிகரெட் வாங்க முயற்சிப்பவருக்கு குறைந்தபட்சம் 63 வயது என்பதை நிரூபிக்க ஐடி தேவை.

ஆனால் இதற்கு முன்னதாகவே நாட்டில் புகைபிடித்தல் குறையும் என சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்து 2025ஆம் ஆண்டுக்குள் புகை இல்லாத நாடாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளது.

புதிய சட்டம் புகையிலை விற்க அனுமதிக்கப்படும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை சுமார் 6,000 இலிருந்து 600 ஆகக் குறைக்கும்.

மேலும் சிகரெட் இல்லாத புகையிலையில் குறைந்த நிகோடின் உள்ளடக்கம் மட்டுமே இருக்கும் என கூறப்படுகின்றது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெரால், “ஒரு பொருளைப் பயன்படுத்துபவர்களில் பாதி பேரைக் கொல்லும் ஒரு பொருளை விற்பனை செய்ய அனுமதிப்பதற்கு எந்த நல்ல காரணமும் இல்லை. எதிர்காலத்தில் இதை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் இந்த சட்டத்தை நிறைவேற்றுவோம், மக்களைக் காப்பாற்றுவோம். இந்த சட்டம் தலைமுறை மாற்றத்தை கொண்டு வரும், இளைஞர்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் 76:43 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்த ACT கட்சி சிகரெட் விற்பனையை தடை செய்வதால் பல சிறிய கடைகளில் வியாபாரம் முடங்கிவிடும் என்று கூறியது.