இலங்கை அரசுக்கு இந்தியா கண்டனம்!

0
561

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்தே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கையை இந்தியா கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ஈழத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதற்காக இலங்கை அரசியலமைப்பில் செய்யப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துதல், மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரம், மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்துதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றத்தையும் இலங்கை அரசு எட்டவில்லை” என்று ஜெனீவாவில் கடந்த 12 ஆம் திகதி உரையாற்றிய இந்திய பிரதிநிதி குற்றம் சாட்டினார்.

இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா! | India Condemned The Sri Lankan Government

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒருபோதும் ஆதரிக்காத பா.ஜ.க ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பதை வலியுறுத்தி வந்த பின்னணியில் ஐ.நாவில் இலங்கையை இந்தியா கண்டித்துள்ளது.

“ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இதை இலங்கை உறுதி செய்ய வேண்டும்” என்று கண்டிப்புடன் இந்திய பிரதிநிதி குறிப்பிட்டிருந்தார். மேலும், மத்திய பா.ஜ.க அரசாங்கத்தின் இந்த கண்டிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் இலங்கையை சீனா ஆதரிப்பதால் தான் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றியதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும், ஐ.நாவில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன. குறிப்பாக கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை பயணம் மேற்கொண்ட அண்ணாமலை மே 1 இல் நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய உழைப்பாளர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

அங்கு பேசிய அவர், “ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியது போல நானும் என் இரத்தத்தின் இரத்தமான இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன். இன்றைய இந்தியா மோடியின் வல்லரசு இந்தியா. இலங்கை மக்களை இந்தியா ஒரு போதும் கைவிடாது. உங்களின் துயரங்கள் அனைத்தும் விரைவில் விடுபடும்” என்றார்.

மேலும், இலங்கை பயணம் குறித்த விரிவான அறிக்கையை அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவிடம் அண்ணாமலை வழங்கியிருந்தார். இந்நிலையில், ஐ.நா பேரவையில் இலங்கை பற்றிய விவாதம் நடப்பதையொட்டி தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசிக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூறியுள்ளனர்.

அதன்படி தன்னிடம் ஆலோசித்த ஜெய்சங்கரிடம் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாத நிலையில் நாம் முழுமையாக தமிழர்கள் பக்கம் நிற்பது தான் சரியானது. இலங்கை தமிழர்கள் மோடியை தான் நம்பியுள்ளனர்.

எனவே, 13 ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தி அரசியல் அதிகாரம் வழங்குதல் போன்ற அடிப்படையான கோரிக்கைகளை இந்தியா வலியுறுத்த வேண்டும். இதைத் தான் தமிழக மக்களும் விரும்புகின்றனர்” என அண்ணாமலை கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்தே “கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை” என ஐ.நாவில் கண்டித்ததுடன் “இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், சமநீதி, சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்” என இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.