அதிகாலையில் நாட்டை வந்தடைந்த இரண்டு அணிகள்; கொண்டாட்டத்தில் இலங்கை மக்கள்

0
327

ஆசிய கிண்ணத்தை தன் வசமாக்கிய இலங்கை கிரிக்கெட் அணியும் ஆசிய செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று (13) அதிகாலை 12.50 அளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

வலைப்பந்தாட்ட அணியை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க வரவேற்றார்.

இதேவேளை 6 ஆவது தடவையாக ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை 5 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

அவர்களை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை வந்தடைந்துள்ள விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதிகாலை நாட்டை வந்தடைந்த இரு அணியினர்; கொண்டாட்டத்தில் இலங்கை மக்கள் | Two Teams Reached The Country Early In The Morning

இன்று காலை 06.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட வாகன பேரணி கொழும்பு நீர்கொழும்பு வீதி ஊடாக பேலியகொட சந்தி, மருதானை சந்தி, டாலி வீதி, யூனியன் பிளேஸ், அலெக்ஸாண்ட்ரா வீதி ஊடாக சுதந்திர மாவத்தையை சென்றடைவதுடன் அவ்விடத்தில் விசேட வரவேற்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த அனைத்து மக்களும் தங்கள் கைகளில் தேசியக் கொடிகளுடன் பாதையின் இருபுறமும் ஒன்று சேருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

கட்டுநாயக்கவில் ஆரம்பமான இந்த வாகன பேரணி ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து சம்மேளன தலைமையகத்தை வந்தடைய உள்ளது.