பிரான்ஸில் தாய் ஒருவர் தனது மகனின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு சடலத்தை மீட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் கன் (Cannes) நகரில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதி வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சில நிமிடங்களில் அங்குள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த துர்நாற்றம் வருவதை கண்டுபிடித்த பொலிஸார் அவ்வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர்.
உள்ளே 76 வயதுடைய மூதாட்டி ஒருவர் இருந்துள்ளார். அதேவீட்டின் மறுமொரு அறையில் இருந்து இந்த துர்நாற்றம் வீசியுள்ளது. அறையின் கதவை திறந்தபோது உள்ளே சிதைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் இருப்பதை பொலிஸார் கண்டுள்ளனர்.
விசாரணைகளை மேற்கொண்டதில், குறித்த மூதாட்டியின் மகனே சடலமாக மீட்கப்பட்டதாகவும், அவர் உறங்கிக்கொண்டிருப்பதாக தாம் நினைத்துக்கொண்டிருந்ததாகவும் மூதாட்டி தெரிவித்துள்ளார்.
குறித்த சடலத்தில் வெட்டுக்காயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த பொலிஸார் குறித்த நபர் இறந்து ஒரு மாதம் இருக்கலாம் என தெரிவித்தனர். உடல் முற்றாக சிதிலமடைந்து அழுகி இருந்ததாகவும் தெரிவித்தனர்.
பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த பெண்ணின் மகன் ஜுலை மாதம் 27ஆம் திகதியே இறுதியாக உயிருடன் கண்டதாக அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குறித்த பெண்மணி கன் நகரில் உள்ள மருத்துவமனையின் மன நல பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.