ட்ரெண்டாகி வரும் ‘Quiet Quitting’ : அப்படி என்றால் என்ன?

0
558

உலகம் முழுழுவதும் ‘quiet quitting’ என்னும் விடயம் பிரபலமாகி வருகிறது. தங்களுக்குத் தெரியாமலே தாங்கள் quiet quitting ஐப் பின்பற்றி வருவது இப்போதுதான் தங்களுக்குப் புரிந்துள்ளதாக பலர் தெரிவித்துள்ளார்கள்.  

உலக நாடுகள் பலவற்றில் ‘quiet quitting’ என்னும் விடயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த Quiet Quitting என்றால் என்ன?

பிடிக்காத வேலையை விட்டு அமைதியாக வெளியேறிவிடுவதா?  

இந்த கொரோனா பொதுமுடக்கக் காலகட்டம், வேலை குறித்த பலரது கண்ணோட்டத்தை மாற்றிவிட்டது. நான் எதற்காக வேலை செய்கிறேன், வேலை என்பது என் கொள்கைகளை விட வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததா என தங்களைத் தாங்களே கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்கள் மக்கள்.

பொதுமுடக்கக் காலகட்டத்தின் மீது வீட்டிலிருந்தவண்ணம் பணியாற்றிவந்த Paige West என்பவர், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கம்பியூட்டரையே பார்த்துக்கொண்டிருந்த நிலையில் மெல்ல தான் quiet quitting ஐ தழுவிக்கொண்டதாக தெரிவிக்கிறார்.

இந்த quiet quitting என்பது பிடிக்காத வேலையை விட்டு அமைதியாக வெளியேறுவது அல்ல. அது வேலை நேரத்துக்குக் கட்டுப்பாடு விதிப்பது போன்ற ஒரு விடயமாகும்.

உதாரணமாக சிலர் வேலையின் நடுவில் பதறிப் பதறி மதிய உணவை விழுங்குவார்கள். வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றாலும் குடும்பத்துடன் முழுமையாக நேரம் செலவிடாமல் நடு நடுவே கம்பியூட்டரிலோ அல்லது மொபைலிலோ மின்னஞ்சல்களை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆக, இந்த quiet quitting என்னவென்றால், வேலை முடிந்தால் வீட்டுக்குச் சென்று மீதமுள்ள நேரத்தை குடும்பத்துடன் நிம்மதியாக செலவிடவேண்டும், மதிய உணவைப் பதற்றமின்றி, முழு மதிய இடைவேளையையும் பயன்படுத்திக்கொண்டு உண்ணவேண்டும். நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விடுப்பை எடுத்துக்கொள்வது, குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் பங்குகொள்வது, வேலை செய்யும் நேரத்தில் வேலை, வேலை முடிந்தபிறகு சொந்த அல்லது குடும்ப விடயங்களில் கவனம் செலுத்துவதுதான் quiet quitting.

இந்த விடயம் இப்போது பல நாடுகளில் பரவிவரும் நிலையில் சமூக ஊடகங்களில் quiet quitting குறித்த விடயங்கள் வைரலாகி வருகின்றன.  

இன்னொருபக்கம், quiet quitting என்றால் என்னவென்றே தெரியாமல், தாங்கள் முன்பே அதை துவங்கிவிட்டது தெரியவந்துள்ளதால் பலர் வியப்படைந்துள்ளார்கள்.

ஆனால், இந்த விடயம் அலுவலகங்களுக்கு நல்லதல்ல, அதை ஒழித்துக்கட்டவேண்டுமென பணி வழங்குவோர் சிலர் கருதுகிறார்கள். நிபுணர்களோ, அப்படியல்ல, பணியாளர்களின் பணி எவ்வளவு முக்கியமானது, அவர்களிடமிருந்து அலுவலகம் எதை எதிர்பார்க்கிறது என்பதை சரியான விதத்தில் பணியாளர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்கிறார்கள்.

பணியாளர்களுக்கு எந்த வேலைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை தெரியப்படுத்துவதன் மூலம், பணியாளர்கள் மனக்களைப்பு அடையவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மீது தொடர்ச்சியாக நிறுவனங்களும் மேலாளர்களும் கவனம் செலுத்தவேண்டும் என்கிரார்கள் அவர்கள்.

மகிழ்ச்சியான பணியாளர்களால்தான் நல்ல விளைவைக் கொடுக்கமுடியும் என்கிறார்கள் அவர்கள்.