இலங்கை எதிர்நோக்கிவரும் பொருளியல் நெருக்கடியால் பெட்ரோல் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
அதனால் இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுகளில் பங்கேற்கும் சில இலங்கை வீரர்கள் பயிற்சிகளுக்குச் செல்ல தங்களின் வாகனங்களில் போகாமல் ரயிலில் சென்றனர்.

அதிக விலையில் விற்கப்படும் பெட்ரோலுக்காக பல மணிநேரம் வரிசையில் காத்திருக்கவேண்டியிருந்தது அதற்குக் காரணம். சில வீரர்களுக்கு அதையும்விட மோசமான நிலை ஏற்பட்டது.

அவர்கள் 20 கிலோமீட்டர் தூரம் நடந்து பயிற்சிகளில் ஈடுபடவேண்டியிருந்தது. தங்களின் நாட்டைவிட்டு இங்கிலாந்தில் அடைக்கலம் தேடிக்கொள்ள வேண்டாம் என்று அதிகாரிகள் தங்களிடம் கூறியதாகவும் ஒருவர் சொன்னார்.
எனினும், விளம்பர ஒப்பந்தங்கள், விளையாட்டரங்கு நுழைவுச்சீட்டு விற்பனையின் மூலம் ஈட்டப்படும் தொகை போன்றவற்றால் இலங்கையின் கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் தொடர்ந்து இருந்து வருகிறது.

அது, காமன்வெல்த் விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு 22 மில்லியன் இலங்கை ரூபாய் தொகையை வழங்கி உதவிக்கரம் நீட்டியது. விமானச் சேவைகள், தங்கும் வசதி, போட்டிகளுக்குத் தேவையான ஆடைகள் ஆகியவற்றுக்கு அந்தத் தொகை உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சவால்களை எதிர்கொண்டு சோகத்தில் ஆழ்ந்திருக்கும் தங்களின் நாட்டிற்குப் பெருமை தேடித் தரும் இலக்கைக் இலங்கை வீரர்கள் கொண்டுள்ளனர்.
