சிறுமிகளை துஷ்பிரயோகப்படுத்துவதற்கு உதவிய குற்றச்சாட்டு தொடர்பில், கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டெய்னின் முன்னாள் காதலியான கிஸ்லெய்ன் மெக்ஸ்வெல்லுக்கு அமெரிக்க நீதிமன்றம் நேற்று 20 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன் அவருக்கு 750,000 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
60 வயதான கிஸ்லெய்ன் மெக்ஸ்வெல் பிரிட்டனைச் சேர்ந்தவர். அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டைனிடம் கிஸ்லெய்ன் மெக்ஸ்வெல் பணியாற்றியதுடன் அவரின் காதலியாகவும் இருந்தார்.
ஜெப்ரி எப்ஸ்டெய்ன், கிஸ்லெய்ன் மெக்ஸ்வெல் ஜோடிக்கு பிரபலங்கள் பலர் நண்பர்களாக இருந்ததாக கூறப்படும் நிலையில் பிரித்தானிய இளவரசர் அண்ட்ரூ, பில் கிளின்டன், டொனால்ட் ட்ரம்ப் உட்பட பலர் இவர்களில் அடங்கியிருந்தனர்.
அதேவேளை ஜெப்ரி எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதுடன், தனது நண்பர்களுக்கும் சிறுமிகளை விநியோகித்தார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த வேர்ஜீனியா கியூப்ரே எனும் பெண், 2001ஆம் ஆண்டு 17 வயது சிறுமியாக இருந்தபோது அவரை இளவரசர் அண்ட்ரூ வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தியமை பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டைனினால் தான் வாடகைக்கு விடப்பட்டிருந்ததாக வேர்ஜீனியா கியூப்ரே (வேர்ஜீனியா ரொபர்ட்ஸ்) கூறினார். தான் 17 வயதானவராக இருந்தபோது, லண்டனில் வைத்து தனது, விருப்பத்துக்கு மாறாக இளவரசர் அண்ட்ரூவுடன் உறவுகொள்வதற்கு இளவரசர் இளவரசர் அண்ட்ரூ, கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டெய்ன், எப்ஸ்டெய்னின் நண்பி கிஸ்லெய்ன் மெக்ஸ்வெல் ஆகியோர் தன்னை நிர்ப்பந்தித்தனர் என நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தற்போது 38 வயதான வேர்ஜீனியா குய்ப்ரே தெரிவித்திருந்தார்.
2 ஆம் எலிஸபெத் அரசியின் 2 ஆவது மகனான இளவரசர் அண்ட்ரூ, தான் வேர்ஜீனியாவுடன் ஒருபோதும் தகாத உறவில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்திருந்தார். அவரை சந்தித்ததாக தனக்கு நினைவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், வேர்ஜீனியாவுடன் இளவரசர் அண்ட்ரூ காணப்படும் புகைப்படம் வெளியாகியிருந்தது.
கிஸ்லெய்ன் மெக்ஸ்வெல்லும் அப்படத்தில் காணப்பட்டார். அதேவேளை, ஏற்கெனவே குற்றவாளியாக காணப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டைய்ன், அமெரிக்க சிறைச்சாலையொன்றில் 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார். அதன்பின், கிஸ்லெய்ன் மெக்ஸ்வெல், சிறுமிகளை பாலியலுக்காக கடத்தியமை முதலான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வேர்ஜீனியா குய்ப்ரேதன் மீதான வழக்கை எதிர்கொள்ளத் தயார் என 61 வயதான இளவரசர் அண்ட்ரூ கூறிவந்தார்.
எனினும் வேர்ஜீனியா குய்ப்ரேவுக்கு இளவரசர் அண்ட்ரூ பணம் வழங்கியதையடுத்து இவ்வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், கிஸ்லெய்ன் மெக்ஸ்வெல் குற்றவாளி என கடந்த டிசெம்பர் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவருக்கு 30 முதல் 55 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என வழக்குத்தொடுனர்கள் கோரினர். ஆனால், அமெரிக்க நன்னடத்தை அலுவலகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட 20 வருடங்களுக்கு உட்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கிஸ்லெய்ன் மெக்ஸ்வெல்லின் சட்டத்தரணிகள் கோரினர்.
இந்நிலையில், கிஸ்லெய்ன் மெக்ஸ்வெல்லுக்கு 20 வருட சிறைத்தண்னை விதித்ததுடன் 750,000 டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.