வெளிநாடு வாழ் இந்திய அழகியாக முடிசூடிய மருத்துவ மாணவி

0
590

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியின பெண்களில் சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான வெளிநாடுவாழ் இந்திய அழகி போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு வெளியே நீண்டகாலமாக அதாவது 29 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த இந்திய அழகி போட்டியை இந்திய விழாக்குழு நடத்துகிறது.

2022-ம் ஆண்டுக்கான இந்த போட்டி அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அதில் இங்கிலாந்தில் வசிக்கும் குஷி படேல் வெற்றி பெற்று வெளிநாடுவாழ் இந்திய அழகியாக கிரீடம் சூடியுள்ளார்.

மருத்துவ மாணவியான இவர் ஒரு மாடலும் ஆவர். சொந்தமாக ஓர் ஆடை கடையையும் நடத்தி வருகிறார்.வெளிநாடுவாழ் இந்திய அழகியாக தேர்வு பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குஷி படேல், அடுத்த ஓராண்டுக்கு பல நலஉதவி நிகழ்வுகளில் பங்கேற்கவும் ஏழை நாட்டு மக்களுக்கு உதவவும் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.

இந்த ஆண்டுக்கான வெளிநாடுவாழ் இந்திய அழகி போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த வைதேகி டோங்ரே 2-வது இடத்தையும் ஸ்ருத்திகா மனே 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

கயானாவைச் சேர்ந்த ரோஷணி ரசாக் இந்த ஆண்டுக்கான வெளிநாடுவாழ் டீன் இந்திய அழகியாக தேர்வு பெற்றுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் நவ்யா பைங்கோல் 2-வது இடத்தையும் சுரினாமை சேர்ந்த சிக்கிதா மலாகா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதன்போது கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளிநாடுவாழ் இந்திய அழகி போட்டி மும்பையில் நடந்தது. அதன்பின் கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக அரங்கேறாத இப்போட்டி தற்போது நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.