சொகுசு கார் விபத்தில் சீன நாட்டவர் மரணம்!

0
582

பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் தங்கியிருந்த சீனாவைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து வியாபார நோக்கத்திற்காக புத்தளம் – கற்பிட்டி பகுதிக்கு வருகை தந்த சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட இருவர் பயணம் செய்த சொகுசு கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற போது, பாலாவி பகுதியிலிருந்து கற்பிட்டி பகுதியை நோக்கி சீனர்கள் பயணித்த சொகுசு கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த வேகத்தை குறித்துக் காட்டும் இரும்புக் கம்பி ஒன்றின் மீது மோதியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், விபத்துக்குள்ளான கார் வீதியில் கவிழ்ந்து சுமார் 50 மீற்றர் வரை இழுத்துச் சொல்லப்பட்டு, வீதியோரத்தில் உள்ள தொலைபேசி தூண் ஒன்றின் மீதும் மோதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் கற்பிட்டி பொரிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த சொகுசு காரில் பயணம் செய்த பெண் உட்பட இருவரையும் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குறித்த வாகனத்தை செலுத்தி சென்ற சீனரான 45 வயதுடை நபர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், காயமடைந்த சீன நாட்டு பெண் தொடர்ந்தும் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.