வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானம்!

0
512

இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது.

பௌசர் வாடகைக் கட்டணத்தை 30% அதிகரிப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரின் உறுதிமொழி கிடைத்ததையடுத்து பணிப்புறக்கணிப்பை கைவிட சங்கம் தீர்மானித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்துள்ள நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பவுசர் வாடகைக் கட்டணத்தை 40% அதிகரிக்கக் கோரி இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை (ஏப்ரல் 30) ​​நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்றும் இன்றும் நாடு முழுவதும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக LIOC தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கமும் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கடுமையாக பாதித்த அதேவேளையில் முத்துராஜவெல முனையத்தில் இருந்து எரிபொருள் விநியோகம் நேற்று முற்றாக நிறுத்தப்பட்டதுடன், சில டேங்கர் உரிமையாளர்கள் தமது பௌசர் ட்ரெய்லர்களை முனையத்தில் பிரித்து விட்டுச் செல்லவும் தீர்மானித்துள்ளனர்.

வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் விநியோகம் இன்மையால் தற்காலிகமாக மூடப்பட்டன.

வழமைக்கு மாறாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் மற்றும் உதிரிபாகங்களின் விலைகள் சுமார் 300% அதிகரித்துள்ள நிலையில், போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரப்போவதாக தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

எவ்வாறாயினும், தனியார் பவுசர் உரிமையாளர்கள் சேவையில் இருந்து விலகிக் கொண்டால், எரிபொருள் விநியோகத்தை இடையூறு இல்லாமல் தொடர மாற்று முறைகள் நடைமுறையில் உள்ளன என்று எரிசக்தி அமைச்சர் ட்வீட் செய்திருந்தார்.

புதிய சப்ளையர்களுக்கு எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான பதிவை உடனடியாகத் திறக்குமாறும், கடமைக்கு சமூகமளிக்கத் தவறியவர்களின் பதிவை இரத்துச் செய்யுமாறும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL) நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத புகையிரதங்கள், அரசாங்கத்திற்கு சொந்தமான, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொந்தமான மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பௌசர்கள் எரிபொருள் விநியோக சேவைகளை தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.