தமிழரசுக்கட்சி பிரச்சனைக்குரிய கட்சி – சிறிகாந்தா

0
44

தமிழரசுக்கட்சியில் உள்ள பலரும் தனிக்கடை போட்டு அரசியல் நடாத்த விரும்புகிறார்கள் எனத் தமிழ்த் தேசிய கட்சியினுடைய தலைவர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சி என்றாலே பிரச்சனைக்கு உரிய கட்சி என்றுதான் அர்த்தம். தமிழரசு கட்சியில் இப்போது உள்ளவர்களை விட ஒருகாலத்திலே தமிழரசு கட்சியுடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவன் நான்.

அது அன்றைய தமிழரசுக்கட்சி. இன்று இருப்பது ஒரு புதிய தமிழரசு கட்சி. இந்த புதிய தமிழரசு கட்சியிலே இருப்பவர்களிலே சம்பந்தனையும், சேனாதிராஜாவையும், குலநாயகம் போன்ற ஒரு சிலரை விட ஏனையோருக்கு அன்றைய தமிழரசு கட்சி பற்றி ஏதுவுமே தெரியாது.

இப்பொழுது புதிய தமிழரசு கட்சிக்குள் வந்திருப்போருக்குத் தமிழரசு கட்சியின் தலையைப் பற்றியும் தெரியாது, காலைப் பற்றியும் தெரியாது. அவர்கள் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தோடு வந்திருக்கிறார்கள். அதனாலே தான் அவர்களை புதிய தமிழரசுக்கட்சி என நான் பேசுகிறேன்.

ஆனால் தேசியம் சார்ந்த கட்சியாக, தமிழ்த் தேசியத்தை முன்வைத்துள்ள ஒரு கட்சியாகத் தமிழரசு கட்சியும் இருந்து கொண்டிருக்கிறவரையில் ஒற்றுமை பற்றிச் சிந்திக்கிற எவரும் தமிழரசு கட்சியைப் புறந்தள்ளி ஒற்றுமையைப் பற்றிப் பேசமுடியாது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.