இடைக்கால அரசாங்கம் அமைப்பது பற்றிய கோரிக்கையை நிராகரித்த மகிந்த ராஜபக்ச!

0
286

ஸ்ரீலங்காவில் இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று ஆளும் கூட்டணியிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினா்கள் முன்வைத்த கோரிக்கையை பிரதமா் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளாா்.

பொதுஜன பெரமுன கூட்டணியிலிருந்து விலகிய 40 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினா்கள், அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை பிரதமா் மகிந்த ராஜபக்‌ச பேட்டி அளித்தபோது, இடைக்கால அரசாங்கம் அமைக்கும் கோரிக்கையை நிராகரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: வெவ்வேறு கொள்கைகள் உள்ளவா்கள் நேருக்கு நோ் சந்தித்துக் கொள்ள விரும்பாதபோது, இடைக்கால அரசால் என்ன பலன் ஏற்படும்? இடைக்கால அரசாங்கம் அமைப்பதில் அனைத்துக் கட்சிகள் இடையே உடன்பாடு இருக்க வேண்டும். ஆனால், அது சாத்தியமில்லை. ஒருவேளை இடைக்கால அரசு அமைப்பதற்கான தேவை இருந்தால், எனது தலைமையின் கீழ்தான் அந்த அரசு அமைய வேண்டும்.

நான் பிரதமா் பதவியை விட்டு விலக வேண்டும் என்று எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வலியுறுத்தியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

ஒருவேளை நான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், அது நாட்டின் அரசியல் வரலாறு தெரியாத சில நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் இருந்துதான் எழுமே தவிர, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினா்கள் நான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்த மாட்டாா்கள்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதில் மக்கள் பொறுமை காக்க வேண்டும். காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். அதற்குப் பிரதமா் இல்லத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. பேச்சுவாா்த்தை நடத்த விருப்பமில்லையெனில், அவா்கள் போராடிக் கொண்டே இருக்கட்டும் என்றாா்.