இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா உறுதி!

0
465

நாட்டை நிரந்தரமான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பாதையில் அமைப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் தெற்று ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, (Donald Lu) நிதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Dr.B.Nandalal Weerasinghe) ஆகியோருக்கு இடையில் வாஷிங்டனில் இடம்பெற்ற கலந்துரையாடலை சுட்டிக்காட்டியே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி சவால்களை வெற்றிகொள்வது தொடர்பில் அமெரிக்கா – இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை முக்கியமானது என அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ தனது உத்தியோகப்பூர்வ டுவிற்றர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

மறுப்புறம் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கான நிலையான தீர்வை நோக்கி இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் செயற்படுவதை அமெரிக்கா வரவேற்பதாக அமெரிக்க இராஜாங்க தினைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.