சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ள 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0
594

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி நாடாளுமன்றத்தில் தனியான அணியாக அமர தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தமது அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உட்பட 10 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தனியான அணியாக செயற்பட உள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் ஆளும் கட்சியினர் அதற்கு இணங்கவில்லை என்பதால், அரசாங்கத்தில் இருந்து விலக அந்த கட்சி தீர்மானித்தது.