எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் : நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

0
432

அரசாங்க நிதியை சரிசெய்யும் முயற்சியில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வரி விகிதங்களை உயர்த்தி எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என்று நிதியமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் எனவும் தெரிவித்தார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள இந்த நிதி அவசியம் என கூறினார்.

எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை இலங்கை நாடும் என்றும் இது சுமார் 5 வார தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று சப்ரி கூறினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சீனா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவையும் அரசாங்கம் கோரும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.