உக்ரைனில் மக்களை கொன்று குவிப்பதாக குற்றச்சாட்டு: ரஷ்யா விளக்கம்

0
321

ரஷ்ய இராணுவம் புக்கா பகுதியில், அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ள நிலையில்,ரஷ்யா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்-க்கு அருகே உள்ள புக்கா என்ற நகரத்தில் சாலையில் நூற்றுக்கணக்கான உடல்கள் சிதறிக்கிடந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது ஒரு இனப்படுகொலை என்றும் இதை செய்தது ரஷ்யா என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றஞ்சாட்டியிருந்தார். 

உக்ரைனின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர், தங்களது படைகளால் பொதுமக்கள் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

புக்கா நகரப் பகுதியை சனிக்கிழமையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக உக்ரைன் கூறியிருந்த நிலையில், அதன் பிறகே அங்கே உடல்கள் சிதறிக்கிடந்த காட்சிகள் வெளியானதாக ரஷ்ய அமைச்சர் கூறியுள்ளார்.

இது உக்ரைன் நடத்தும் நாடகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தனிப்பட்ட விசாரணைக்கும் ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.