நாட்டில் நீரேந்தும் பிரதேசங்களில் உள்ள நீர் தேக்கங்கள் வற்றியதன் காரணமாகவே மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் இருக்கும் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த காலத்தில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி கிடைத்ததன் காரணமாக 50 வீதமான மின்சாரம் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாகவே விநியோகிக்கப்பட்டன.
சாதாரணமாக மழை வீழ்ச்சி இல்லாத காலத்தில் இப்படியான மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவது வழக்கம். நிலைமை இந்தளவுக்கு உச்சமடைவதற்கு முன்னர், சில நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்போ அல்லது நாடாளுமன்றமாகவோ இருக்கலாம். அல்லது நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையாக இருக்கலாம்.
தற்போது இலங்கை மின்சார சபை சுமார் 125 இடங்களுக்கு மின்சாரத்தை துண்டிப்பதில்லை. நேற்று வரை அந்த நிலைமை காணப்பட்டது. துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்க வேண்டிய நிறுவனங்கள் குறிப்பாக வைத்தியசாலைகள், தொழிற்பேட்டைகளுக்கு மின்சாரம் தடையின்றி வழங்கப்படும்.
அப்போது அந்த மின் இணைப்பு கட்டமைப்புடன் சம்பந்தப்பட்டுள்ள வீடுகள், இடங்களுக்கு மின்சாரம் கிடைக்கும். அப்படியான இடங்களுக்கு சென்று மின் துண்டிப்பை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன் எனவும் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ளார்.