வவுனியாவில் தாக்குதல் மேற்கொண்ட குழுவினர்: காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

0
233

வவுனியா இளைஞன் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் தாக்குதலுக்குள்ளானவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் சில கட்சி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்களைத் தனது முகநூல் வாயிலாக விமர்சித்தும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர் சிலர் தொடர்பில் புகைப்படங்களைச் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டும் கருத்து தெரிவித்து வந்த இளைஞன் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற தாக்குதலில் தலை, முகம், கை, கால் பகுதிகளில் பலமாகத் தாக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞன் மீது நொச்சி மோட்டைப்பகுதியில் வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தாக்குதலில் காயமடைந்த இளைஞனின் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையில் சிலர் நொச்சிமோட்டை பகுதியில் வைத்துத் தாக்கினர்.

பின்னர் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள தயா என்பவரின் வீட்டிற்கு அருகில் வைத்தும் தாக்கினர். பின்னர் எனது தொலைபேசி, பணப்பை என்பனவற்றையும் தாக்கியவர்கள் எடுத்துவிட்டு நான் இறந்துவிட்டதாக நினைத்து மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்துக்கு முன் என்னை போட்டுவிட்டுச் சென்றனர்.

இதற்கு திலீபன் எம்.பியே முதல் காரணம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதனை ஆவணப்படுத்தி சமூகவலைத்தளத்தில் வெளிப்படுத்தியவர் ஈ.பி.டி.பி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.