தோஹாவில் என்விரொட் கியூ | அக்ரிட் கியூ 2022 இல் இலங்கை பங்கேற்பு

0
431

ஜி.சி.சி. சந்தையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்குடன் தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 2022 மார்ச் 10 முதல் 14 வரை நடைபெற்ற கத்தாரின் 9ஆவது சர்வதேச விவசாயக் கண்காட்சியான அக்ரிட் கியூ 2022 இல் இலங்கையின் விவசாய உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முதன்முறையாக தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து மேற்கொண்டது.

இலங்கைத் தூதரகம் இரண்டாவது முறையாக இந்தக் கண்காட்சியில் பங்கேற்றது. ட்ரட்லங்கா அக்ரிகல்சரல் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் (ஆரிய உணவு), நெக்ஸ்போ கன்வெர்ஷன் (பிரைவேட்) லிமிடெட் (சைவ உணவு மற்றும் வழக்கமான தேங்காய்ப் பால் பவுடர் உற்பத்திகள்), ஜயலங்கா சப்ளையர்ஸ் (கித்துல் சிரப் மற்றும் எள் அடிப்படையிலான உற்பத்திகள், சுவையூட்டிப் பொருட்கள்), கான்ட்ரிக் டீ பிPவரேஜஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் (சிலோன் டீ), சிலு ஃபெஷன்ஸ் (கைவினைப் பொருட்கள் மற்றும் பட்டிக் தயாரிப்புக்கள்) ஆகியவை இலங்கைக் கூடத்தில் ஒரு பகுதியாக இருந்தன.

கத்தார் சபையின் தலைவர் ஷேக் கலீஃபா பின் ஜாசிம் அல் தானி, கத்தார் சபையின் முதல் துணைத் தலைவர் முகமது பின் த்வார் அல் குவாரி மற்றும் இரண்டாவது துணைத் தலைவர் ரஷித் பின் ஹமத் அல் அத்பா ஆகியோரின் முன்னிலையில் கத்தார் நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல் அஜீஸ் அல் தானி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கத்தார் அரசின் நகர, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சுக்கள் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன.

என்விரொட் கியூ | அக்ரிட் கியூ 2022 இல் இலங்கைக் கூடத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கத்தார் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் மஃபாஸ் மொஹிதீனும், இலங்கை வர்த்தக சபையும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது சிலோன் டீ, சிலோன் சுவையூட்டிப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் மற்றும் பட்டிக் தயாரிப்புக்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சமூகத்தினர் மத்தியில் பாரிய தேவை இருந்தது.

தொழில் வல்லுநர்கள் மற்றும் கண்காட்சியாளர்களுக்கு இடையேயான வணிக சந்திப்புக்களை அமைப்பாளர்கள் எளிதாக்கினர். இலங்கையில் இருந்து சிலோன் டீ, சுவையூட்டிப் பொருட்கள், புதிய பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வது குறித்து விசாரணை செய்ய பல சாத்தியமான இறக்குமதியாளர்கள் இலங்கைக் கூடத்திற்கு சென்றனர்.

இந்த ஆண்டு அக்ரிட் கியு உள்ளூர் மற்றும் சர்வதேச விவசாயப் பங்குதாரர்களுக்கு நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்ளவும், போக்குகள் மற்றும் முன்னேற்றங்களைக் கண்டறியவும், இந்த முக்கியமான துறையில் வணிக வாய்ப்புக்களைப் பெறவும் ஒரு முழு அளவிலான தளத்தை வழங்கிய அதே நேரத்தில், என்விரொட் கியு பல்வேறு துறைகளில் சுற்றுச்சூழல் தீர்வுகளை வழங்குவதில் சிறந்த பங்கைக் கொண்டிருந்தது. சர்வதேச மற்றும் உள்ளூர் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு விஷேட தளமான இது, இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுக்கு கத்தார் அரசில் வணிக வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

52 நாடுகளைச் சேர்ந்த 650 கண்காட்சியாளர்களின் பங்கேற்புடன் ஐந்து நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 30 அதிகாரப்பூர்வ தேசியக் கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 30,000 பார்வையாளர்களைப் பெற்ற நிகழ்வு மார்ச் 14ஆந் திகதி நிறைவடைந்தது.

கத்தார் அரசில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டை ஊக்குவிப்பதில் முன்னோக்கிச் செல்லும் ஒரு வழியாக என்விரொட் கியூ | அக்ரிட் கியூ 2022 இல் இலங்கையின் பங்கேற்பை தூதரகம் எளிதாக்கியது.