நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கான தனது 02 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இந்தியாவுடனான ஒரு பில்லியன் டொலர் கடன் வசதிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த நிதி உதவிக்கு கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நடைபெற்ற கடற்தொழிலாளர்களுக்கான இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இது தாகத்தில் இருக்கின்றவருக்கு ஒரு சொட்டு நீர் போல் இருக்கும். இலங்கைக்கான இந்தியத் தூதரகம் மேலும் பல உதவிகளைத் தருவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கில் துறைமுகங்களைக் கட்டுவதற்கான ஏற்பாடு இருக்கின்றது முல்லைத்தீவில் சாலைப்பகுதியில் இறங்கு துறை கட்டுவதற்கான ஏற்பாடு இருக்கின்றது. சில இடங்களில் ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளீர்கள்.
உலகளாவிய கொரோனா தொற்றினால் அபிவிருத்தி அடைந்த நாடுகளே திண்டாடிக்கொண்டிருந்த போது இலங்கை போன்ற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. விலைவாசி பொருள் தட்டுப்பாடு இலங்கையில் மாத்திரம் அல்ல எல்லா நாடுகளிலும் பிரச்சினை இருக்கின்றது.
இலங்கைக்கு இந்திய அரசு ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. எங்களுக்கு கஷ்டமான நேரத்தில் இந்திய அரசின் இந்த உதவிக்காக இந்திய மக்களுக்கும் இந்திய அரசிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.