“நாம் வீதியில் நின்று போராடி மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல” – சிவபாதம் இளங்கோதை

0
555

நாம் வீதியில் நின்று போராடி மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல. நாம் ஒருபோதும் மடிப்பிச்சை கேட்கவில்லையே, எமது பிள்ளைகளின் உயிர்பிச்சையையே கேட்கின்றோமென யாழ். மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு ரூ.100,000 கொடுப்பனவும், மரணச் சான்றிதழும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை தொடர்பாக நேற்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீடு, மரண சான்றிதழ் போன்ற விடயங்களை நாங்கள் ஏற்க மறுத்ததால் தற்போது வாழ்வாதார உதவி என்ற பெயரில் ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை வழங்க முற்படுகின்றனர்.

யாருமே இந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை ஏற்றுக் கொள்ளக்கூடாது. எமது பிள்ளைகளுக்கான கொடுப்பனவு ஒரு லட்சம் ரூபாவா? கடந்த காலங்களில் எமது பிள்ளைகள் காணாமல் போவதற்குப் பிரதானமாகச் செயற்பட்டவரே இன்று ஜனாதிபதியாக உள்ளார்.

அவர் இன்று எமது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவிகள் தரப்போவதாகக் கூறுகிறார். நாம் வீதியில் நின்று போராடி மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல. நாம் ஒருபோதும் மடிப்பிச்சை கேட்கவில்லையே எமது பிள்ளைகளின் உயிர்பிச்சையையே கேட்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.