இஸ்ரேலில் புதிய வகை கோவிட் வைரஸ் அடையாளம்!

0
437

இஸ்ரேலில் புதிய வகை கோவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.  

இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.  

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. பின்னர் கோவிட் வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கோவிட் வைரஸ்கள் கண்டறியப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கோவிட் தொற்றான ஒமிக்ரோன் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

மற்ற உருமாறிய கோவிட் வைரசை விட  ஒமிக்ரோன் மிகவும் வேகமாக பரவக் கூடியது என்று எச்சரிக்கப்பட்டது. அதன்படி ஒமிக்ரோன் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.இந்தநிலையில் இஸ்ரேலில் புதிய வகை உருமாறிய கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாறுபாடு இன்னும் உலகம் முழுவதும் கண்டறியப்படவில்லை என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு டெல்டா வகை மற்றும் ஒமிக்ரோன் வைரஸ் இணைந்து “டெல்டாக்ரோன்” உருவானதுபோல் ஒமிக்ரோன் வைரசின் துணை வகைகளான பி.ஏ.-1 மற்றும் பி.ஏ.-2 ஆகியவை இணைந்து புதிய வகை கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.  

குறைந்தபட்சம் காய்ச்சல், உடல்வலி மற்றும் தலைவலி ஆகியவை புதிய கோவிட் வைரஸ் மாறுபாட்டின் லேசான அறிகுறிகளாகும்.  இந்த மாறுபாட்டால் ஏற்படும் நோய்க்கு சிறப்பு சிகிச்சை தேவையில்லை என கூறப்படுகின்றது.  எனினும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.