மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் அசிட் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் இபுனுபதுத வீதியில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த செகுலாப்தீன் இன்பாஸ் மற்றும் பைரூஸ் நஜிப் ஆகிய இருவல் மீதே இவ்வாறு அசிட் தாக்கதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் புத்தளத்தில் உள்ள மோட்டார் உதிரி பாகங்கள் கடை ஒன்றில் பணியாற்றுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அசிட் தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞர்கள் இருவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.