ஜேர்மனியில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று! எனினும் கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவதென அரசு தீர்மானம்

0
371

ஜேர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளை சில நாட்களுக்குள் நெகிழ்த்துவதென அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால், கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படும் முன்னரே, ஜேர்மனியில் எழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது என்ற எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, The Robert Koch நிறுவனம் 198,888 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாகியுள்ளதாக பதிவு செய்துள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது, இது 42,000 அதிகமாகும். ஆக, மொத்தத்தில் கொரோனா தொற்றுக்காளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 17.4 மில்லியனைத் தாண்டியுள்ளது.

அத்துடன், மேலும் 283 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், ஜேர்மனியில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் 125,873 ஆகியுள்ளது.

இதுவரை அமுலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் சனிக்கிழமையுடன் காலாவதியாகும் நிலையில், கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் வகையில் புதிய சட்டம் ஒன்றை ஜேர்மனி கொண்டு வர உள்ளது.

தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும், மருத்துவமனைகள் அழுத்தத்திற்குள்ளாகும் அபாயம் இல்லை என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இருந்தாலும், நாட்டில் அதிக அளவில் தொற்று உள்ள பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் அமுலில் இருக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.