கொலம்பியாவில் 2 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து! 7 சிறுவர்கள் உள்பட 12 பேருக்கு நேர்ந்த பரிதாபம்

0
1281

கொலம்பியாவில் 2 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 சிறுவர்கள் உள்பட 12 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டுமாக்கோ அருகே கடலில் 2 படகுகள் சென்று கொண்டிருந்தன.

2 படகுகளிலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட மொத்தம் 50 பேர் இருந்தனர். நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக 2 படகுகளும் கடலில் கவிழ்ந்தன. இதில் படகுகளில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் டுமாக்கோ நகர கடலோர காவல்படை வீரர்கள் உடனடியாக மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் 7 சிறுவர்கள் உள்பட 12 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அதேசமயம் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 35 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

மேலும் இந்த விபத்தில் 3 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. எனினும் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.‌

படகு விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.