சிறிலங்கா ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

0
433

“கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்க தனமல்விலவுக்குச் சென்ற சிறிலங்கா ஜனாதிபதி , கொட்டவெஹர மங்கட மகா வித்யாலய வளாகத்தில் கூடியிருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராமவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

மாணவர்களின் வேண்டுகோளின் பேரில் கொட்டவெஹர மங்கட மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை நாளைய தினமே (31) ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி இராணுவத்திற்கு பணிப்புரை விடுத்தார். கல்லூரியின் கேட்போர்கூடத்தை அமைப்பது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

நாட்டின் பல பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறை இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வாக, குறித்த பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

குக்குல்கட்டுவ குளம் உள்ளிட்ட 10 குளங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக புனரமைக்குமாறு மக்கள் முன்வைத்த கோரிக்கையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அலுத்வெவ, கிளிம்புன்ன, கலுதொட்ட, கொட்டவெஹர மங்கட மற்றும் அலுத்வெவ வரையிலான வீதிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிறிய வீதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அலுத்வெவ மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீரின் தேவை மற்றும் அதை விரைவாக நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட ஆனால் இதுவரை செயற்படுத்தப்படாத கும்புக்கன் ஓயா திட்டத்திற்கான திட்டப் பணிகளை விரைவாக நிறைவுசெய்து, இந்த ஆண்டு பணிகளை ஆரம்பித்து துரித அபிவிருத்தித் திட்டமாக நிறைவுசெய்யவும் நீர் வழங்கல் அமைச்சுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

விவசாய நடவடிக்கைகளில் தரமற்ற களைக்கொல்லிகளைப் பயன்படுத்துவது குறித்து உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா டெலிகொம், மொபிடெல் நிறுவனம் அலுத்வெவ கணிஷ்ட வித்தியாலயம் மற்றும் செவனகல மகாநாக கல்லூரிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு அன்பளிப்பு செய்த கணினிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் டயலொக் நிறுவனம் அன்பளிப்பு செய்த கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளை ரத்தம்பலாகல கணிஷ்ட வித்தியாலயம், ஹம்பேகமுவை மகா வித்தியாலய அதிபர்களிடம் ஜனாதிபதி கையளித்தார்.

குறைந்த வருமானம் பெறும் 100,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையில் பயிற்சி பெற்ற மூன்று பேருக்கு இந்நிகழ்ச்சியி போது நியமனம் வழங்கப்பட்டது.