‘வேதா நிலையம்’ நினைவு இல்லமாகிறது

0
469

ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய ‘வேதா நிலையம்’ வீட்டை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அவ்வாறு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

‘வேதா நிலையம்’ 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ளது. அந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும். 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன.

சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கருப்பு-வெள்ளை அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அவருடைய சகோதரர் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் நினைவு இல்லத்தை திறக்க தடை கேட்டு அவசர வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, நினைவு இல்லத்தை திறக்க தடைவிதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. எனவே திட்டமிட்டப்படி இன்று நினைவு இல்லம் திறக்கப்படுகிறது.

நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (28.1.2021) காலை 10.30 மணிக்கு திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.