டெல்லி கலவரத்தில் காயமடைந்த போலீசாரை நேரில் சென்று பார்த்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

0
414

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. டிராக்டர் செல்ல தனியான வழித்தடத்தை டெல்லி போலீஸார் உருவாக்கி இருந்தனர். ஆனால், விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர். இதில் போலீஸாருக்கும், விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர். டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 83 போலீஸார் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீஸார் சார்பில் 15 முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக 2 விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை சம்பவங்களின்போது காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸாரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.