ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று (27) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்றிரவுடன் (26) நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்றைய தினம் இறுதியாக சாட்சி வழங்கியிருந்தார்.
நேற்றிரவு 11 மணியவில் வைத்தியசாலையிலிருந்து ஸ்கைப் தொழில்நுட்பத்தினூடாக ஷானி அபேசேகர சாட்சி வழங்கியுள்ளார்.
2019 செப்டம்பர் 21 ஆம் திகதி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவினால் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் நேற்று வரை, 437 இற்கும் மேற்பட்டோரிடம் சாட்சி விசாரணைகள் பதிவு செய்யப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோரும் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள், முன்னாள் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோரும் சாட்சி வழங்கியிருந்தனர்.
21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு 06 மாத காலம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் 2020 ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதியுடன் குறித்த கால அவகாசம் நிறைவு பெற்றாலும், அதன் பின்னரும் இரு தடவைகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக பெறப்பட்ட கால அவகாசத்திற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு பெறவுள்ளது.