அடுத்தடுத்து தமிழர்களிற்கு பேரிடி! மேலுமொரு கிராமம் குறிவைக்கப்பட்டது

0
396

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கி வைத்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசமான மேலுமொரு பகுதியில் தொல்பொருள் இருக்கின்றனவா என இராணுவம் ஆராயும் அதிர்ச்சி சம்பவம் நடப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு- ஒட்டிசுட்டான் வீதியில்- நகரிலிருந்து சுமார் 700 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புதிய குடியிருப்பு பிரதேசத்தை அண்டிய காட்டு பகுதியிலேயே இராணுவத்தினர் தொல்பொருட்களை தேடி வருகிறார்கள்.

காணியற்ற மக்களிற்காக இந்த பகுதியில் விடுதலைப் புலிகள் குடியிருப்பொன்றை உருவாக்கியிருந்தனர்.

யுத்தத்தின் போது அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது அங்கு மீளகுடியமர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

சில நாட்களின் முன்னர், கிராமமட்ட பிரமுகர் ஒருவரை, முல்லைத்தீவு இராணுவ முகாமின் புலனாய்வு அதிகாரியென அடையாளப்படுத்திய ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த கிராமத்தில் தொல்பொருள் அகழ்வு மேற்கொள்ளக்கூடிய இடங்கள் உள்ளதா என வினவியதாகவும், அவர் இல்லையென மறுத்தபோது, “இல்லை… அங்கு தொல்பொருள் சின்னங்கள் சிதைவடைந்த நிலையில் உள்ளன என எமக்கு தகவல் வந்துள்ளது“ என கூறியதாகவும், கிராம மக்கள் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தனர்.

நேற்று காலையிலிருந்து இன்று வரை பல முறை புலனாய்வாளர்கள் கிராம மட்ட பிரமுகர்களை தொலைபேசியில் தகவல்களை வினவியுள்ளனர்.

எனினும், அப்படியான தகவலெதுவும் தமக்கு தெரியாதென அவர்கள் கூறியதையடுத்து, நேற்று முதல் அங்கு இராணுவ அணியொன்று களமிறக்கப்பட்டுள்ளது.

இன்று மேலும் பல இராணுவத்தினர் அந்த காட்டுக்குள் களமிறக்கப்பட்டனர்.

காட்டுக்குள் இராணுவத்தினர் களமிறக்கப்பட்ட தகவலையடுத்து கிராம மக்களிடம் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தகவலை தெரிவித்தனர். வன்னி எம்.பி வினோநோகராதலிங்கம் இன்று மாலை சம்பவ இடத்திற்கு சென்றார்.

கிராம மக்களும், அவரும் காட்டுக்குள் நுழைந்த போதும் இராணுவத்தினரை காண முடியவில்லை. இன்று மாலை மங்கி விட்டதால் அவர்கள் திரும்பி வந்துவிட்டனர்.

நாளை வினோ நோகராதலிங்கம் தலைமையில் மீண்டும் காட்டுக்கு செல்வதென முடிவெடுக்கப்பட்டது.

மன்னாகண்டல் தொடக்கம் கற்பூரபுல்வெளி வரையான பகுதிகளில் வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் கால எச்சங்கள் நிறைந்துள்ளன.

கற்பூர புல்வெளியில் குருவிச்சை நாச்சியார் தங்கியிருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. பண்டார வன்னியனின் கால எச்சங்கள் உள்ள பகுதிக்கு அண்மையாகவே அந்த கிராமம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.