ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

0
576
Voting begins urban local bodies elections

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்றைய தினம் நடைபெற்று வருகின்ற நிலையில், தொலைபேசி, இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. (Voting begins urban local bodies elections)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு ஒக்டோபர் 8,10,13,16 ஆம் திகதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா அறிவித்துள்ளார்.

இதேபோன்று, பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17 ஆம் திகதி தொடக்கம் 9 கட்டங்களாக நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 17, 20, 24, 27, 29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய திகதிகளில் இந்த ஒன்பது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.

இதன்படி நகராட்சி அமைப்புகளிலுள்ள 1,145 வாக்களிப்பு நிலையங்களில் முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) 422 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதுடன், 4 இலட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலையொட்டி ஜம்மு மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் இன்று பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் பொலிஸார் பணியமர்த்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் வேட்பாளர்கள் அனைவரும் பொலிஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Voting begins urban local bodies elections