தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் சுகாதாரமான வாழ்வினைக் கேள்விக்குறியாக்கி சுற்றுச்சூழல் மண்டலத்தைப் பாழ்படுத்திய வேதாந்தா நிறுவனத்திற்குத் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் தருகிறது.hydro carbon project withdrawn tamilnadu become battlefield far – seeman
நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, ஒ.என்.ஜி.சி. நிறுவனமும், வேதாந்தா நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்தில் இரு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், கமலாபுரம் உட்பட இரு இடங்கள் இதற்கெனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் 1,794 ச.கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2,574 ச.கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 731 ச.கி.மீ. பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எதுவும் காவிரிப்படுகையில் எடுக்க மாட்டோம் எனப் பாராளுமன்றத்தில் கூறிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்றைக்கு அவ்வாக்கை மீறி காவிரிப்படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித்திருப்பது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த பச்சைத்துரோகம்.
தூத்துக்குடியில் 13 உயிர்களைப் பலிகொண்டு, பல இளைஞர்களை ஊனமாக்கி அவர்கள் வாழ்க்கையினையே இழப்பதற்குக் காரணமாக இருந்த வேதாந்தா நிறுவனத்தை அம்மக்களின் மரண ஓலமும், இரத்தவாடையும் நெஞ்சைவிட்டு அகலாது ரணமாக உறுத்திக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழகத்திற்குள் அனுமதித்திருக்கும் மோடி அரசின் நயவஞ்சகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் களப்போராட்டங்களும், கருத்தியலும் தமிழகம் முழுக்க வீரியம்பெற்றிருக்கிற நிலையில் மீண்டும் அதனை அனுமதித்திருப்பது தமிழர்களின் தன்மான உணர்வை உரசிப்பார்க்கும் அதிகாரத்திமிராகும்.
அதனை எதன்பொருட்டும் இனமானத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம் என அறுதியிட்டுக் கூறுகிறேன்.
உலகின் மிக நீண்ட சமவெளிப்பகுதியாக இருக்கிற காவிரிப்படுகையில் பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயம் நடைபெற்று வருவதாகத் தமிழர் இலக்கியங்களும், வரலாற்று ஆவணங்களும் தெரிவிக்கின்றன.
அவையாவும் இம்மண்ணில் நிகழ்ந்தனவா என எள்ளி நகையாடும் அளவுக்குத் தற்போதைய தஞ்சைத்தரணியின் நிலை மாறியிருக்கிறது.
கர்நாடக அரசின் வறட்டுப் பிடிவாதத்தாலும், மத்தியில் ஆண்ட அரசுகளின் பாரபட்சத்தாலும் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழர்களின் வாழ்வியலோடு இயைந்திருந்த காவிரியுடான தொடர்பு துண்டிக்கப்பட்டு, விவசாயம் செய்ய நீரற்று தற்கொலை செய்து சாகிற இழிவான நிலைக்குக் காவிரிப்படுகை விவசாயிகள் ஆளாகி நிற்கிறார்கள்.
கடந்தாண்டு மட்டும் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து, தற்போது ஒட்டுமொத்த விவசாயிகளும் செய்வதறியாது தவித்து நிற்கிற நிலையில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்த அறிவிப்பானது தமிழர்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது.
தமிழர் நிலத்தைப் பாழ்படுத்தும் இந்நாசகாரத் திட்டத்தை எதன்பொருட்டும் அனுமதிக்க முடியாது.
எனவே, மத்திய அரசானது தமிழர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும்.
இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில் தமிழர் நிலவியல் மீதான இப்போருக்கு எதிராக இதுவரை காணாத அளவிற்குப் போர்க்களமாகத் தமிழகம் மாறும் என எச்சரிக்கிறேன். என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஈரானில் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் கடிதம்
- கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்தும் முதலிடம்
- தமிழகத்தில் தொடர் மழை; 06 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை
- எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க டி.டி.வி. தினகரன் பேரம் பேசினார்
- சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் பொலிஸார் நியமனம்
- விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும்; கமல்ஹாசன்
- தமிழக துணை முதலமைச்சர் சந்தித்தது உண்மை; டிடிவி தினகரன்
- ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; இரண்டு பேர் பலி
- எஸ்-400 ரக ஏவுகணையை வாங்க இந்தியா கையெழுத்து
- அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் ; ஜி.கே.வாசன்