நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கணிதத் துறையில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் புதிய சிந்தனைகளை வளர்ப்பவர்கள் என்று கருதப்படும் 40 வயதிலும் குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் “Fields Medal” விருது, கணிதத்திற்கான ‘நோபல் பரிசு’ என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த விருது இரண்டு முதல் நான்கு கணித மேதைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடம், இந்த விருது நால்வருக்கு வழங்கப்படுகிறது. அதில், 16 வயதிலேயே மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அக்ஷய் வெங்கடேஷ் என்ற பேராசிரியரும் ஒருவர். Akshay Vengatesh Award Tamil News
தற்போது 36 வயதான பேராசிரியர் அக்ஷய் வெங்கடேஷ் அமெரிக்காவின் Princeton மற்றும் Stanford பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார்.
இவரது பெற்றோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் – தந்தை கும்பகோணத்தையும், தாயார் தஞ்சாவூரையும் சேர்ந்தவர்கள். 1981ம் ஆண்டு, புதுதில்லியில் பிறந்த அக்ஷய் வெங்கடேஷ், ஆரம்பக் கல்வியை புது தில்லியில் தொடங்கியிருந்தாலும், தந்தையின் பணிமாற்றத்தால், பேர்த் நகருக்குக் குடிவந்து தனது கல்வியைத் தொடர்ந்தார்.
சிறு வயதிலேயே அவருக்கிருந்த கணித வல்லமை காரணமாக “gifted children” என அடையாளம் காணப்பட்டு, விசேஷ பயிற்சிகள் பெற்றிருந்தார். சர்வதேச இயற்பியல் போட்டியான Physics Olympiad இல் பங்கு பெற்றுப் பதக்கம் பெற்ற போது அவருக்கு வயது பதினொன்று. அதே போல் கணிதப் போட்டியிலும் அதற்கடுத்த வருடம் விருது பெற்றுள்ளார்.
14வது வயதிலேயே கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்தில் இணைந்த மிகக் குறைந்த வயதுடைய மாணவன் என்ற சாதனையைச் செய்துள்ளார். கணிதத்தில் சிறப்புப் பட்டத்தை 17வது வயதில் அவர் பெற்ற போது, பல்கலைக்கழகத்தின் முதன்மை மாணவராகவும் கணிக்கப்பட்டார். 2002ம் ஆண்டு, அவரது 21வது வயதில் Princeton பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவரை Massachusetts Institute of Technology பேராசிரியராகப் பணிக்கு அமர்த்தியது.
ஆசிரியப் பணியையும் ஆராய்ச்சிப் பணியையும் தொடரும் இவர், கணிதத் துறையைச் சார்ந்தவர்களால் பல ஆண்டுகளாகச் செய்யப்படாத பல ஆராய்ச்சிகளை குறுகிய காலத்தில் செய்து முடிக்கிறார் என்று மற்றவர்களால் புகழாரம் சூட்டப்பட்டுள்ளார்.
2008ம் ஆண்டு சாஸ்த்ரா-ராமானுஜம் பரிசை, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கணித மேதை இராமானுஜம் பிறந்த ஊரான கும்பகோணத்தில் நடத்திய ஒரு சர்வதேச கணிதக் கருத்தரங்கில் இவருக்கு வழங்கியது.
“Fields Medal” விருது பெறும் இரண்டாவது ஆஸ்திரேலியர் பேராசிரியர் அக்ஷய் வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் இந்த மகத்தான விருதை மேலும் மூவர் பெறுகிறார்கள். தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் Caucher Birkar ஒரு குர்திஸ் அகதி; ஜேர்மனி நாட்டை சேர்ந்த Peter Scholzeயின் வயது 24; மற்றவர் இத்தாலிய நாட்டை சேர்ந்த Alessio Figalli.
1936ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருது இதுவரை ஒரே ஒரு பெண்ணிற்குத் தான் (காலம் சென்ற Maryam Mirzakhani) வழங்கியிருக்கிறார்கள் என்பது சற்று சங்கடமான செய்தி.