நியூ சவுத் வேல்ஸ் மாநில சைக்கிள்/துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதாக வீதி அமைச்சர் Melinda Pavey அறிவித்துள்ளார்.New law cyclists Sydney
பாதசாரிகள் நடைபயணம் போகும் footpaths-வீதியோரப்பாதையில் இனிமேல் 16 வயதுவரையானவர்கள்வரை சைக்கிள் ஓட்டலாம் என்ற சட்டம் அறிமுகமாகிறது.
இதுவரை காலமும் அமுலில் இருந்த சட்டத்தின் பிரகாரம், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே பாதசாரிகள் பயன்படுத்தும் வீதியோர பாதைகளில் சைக்கிள் ஓட்டலாம். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீதியில்தான் சைக்கிள் ஓட்டலாமே தவிர, பாதசாரிகள் பயன்படுத்தும் பாதையை பயன்படுத்த முடியாது. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதசாரிகள் பாதையில் ஓடினால் 112 டொலர்கள் அபராதம் செலுத்தவேண்டியுமிருந்தது.
ஆனால், வீதி விபத்துக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு இந்த வயதெல்லையை 12 இலிருந்து பதினாறாக உயர்த்தியுள்ளதாக Melinda Pavey தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மாத்திரம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1700 சிறுவர்கள் சைக்கிள் விபத்தில் காயமடைந்துள்ளார்கள். இவர்களில் இருவர் உயிரிழத்துள்ளார்கள்.
இந்த வயதெல்லையை அதிகரிக்கும் கோரிக்கையை முன்வைத்து சுமார் 14 ஆயிரம் கையெழுத்துக்களை கோரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு அதன் பிரகாரம் தற்போது சட்டத்தை திருத்தும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.