பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: இந்தியா- நெதர்லாந்து வலியுறுத்தல்

0
581
India Netherlands jointly insisted world firm stand terrorism

India Netherlands jointly insisted world firm stand terrorism

பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியாவும், நெதர்லாந்தும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

2 நாள் அரசுமுறை பயணமாக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

டில்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியபோது பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்தியா-நெதர்லாந்து இடையே வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை மேலும் அதிகரித்து கொள்வதென தலைவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, பிரதமர் மோடியும், மார்க் ரூட்டும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

சர்வதேச சூரிய சக்தி கூட்டணியில் நெதர்லாந்து சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தேன். அதன்படி, அந்த கூட்டணியில் நெதர்லாந்து இன்று முதல் உறுப்பினராகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

நாங்கள் இருவரும் இருதரப்பு உறவுகள் குறித்தும், பரஸ்பர பலன் அளிக்கக்கூடிய பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக உள்ளேன் என்றார்.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் பேசுகையில், “வர்த்தகம், முதலீடு, தூய்மையான எரிசக்தி, வேளாண், பொலிவுறு நகரங்கள் போன்றவற்றில் இந்தியாவும், நெதர்லாந்தும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்றார்.

முன்னதாக, சுட்டுரையில் அவர் ஹிந்தியில் வெளியிட்டிருந்த பதிவுகளில், ‘கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவும், நெதர்லாந்தும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன. இந்த உறவை காலம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதேபோல், டில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

நெதர்லாந்து பிரதமராக பதவியேற்ற பிறகு, இந்தியாவுக்கு மார்க் ரூட் வந்திருப்பது இது 2ஆவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நெதர்லாந்து நாட்டுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக சென்றார். அதையடுத்து, இந்தியாவுக்கு மார்க் வந்துள்ளார். இந்தியா-நெதர்லாந்து இடையே 5.39 மில்லியன் டொலர் மதிப்புக்கு இருதரப்பு வணிகம் தற்போது நடக்கிறது.

இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளில், நெதர்லாந்து 5ஆவதாக உள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலும் இந்தியாவில் நெதர்லாந்து 23 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. அந்நாட்டில் இந்தியா வம்சாவளி மக்கள் சுமார் 2.35 இலட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

India Netherlands jointly insisted world firm stand terrorism

More Tamil News

Tamil News Group websites :