அமெரிக்காவில் ஒன்பது வயது கருப்பின சிறுமியின் முகத்தில் பொலிஸ் அதிகாரிகள் பெப்பர் ஸ்பிரே அடித்து கொடுமை படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போராட்டங்கள் கிளம்பியுள்ளன.
அமெரிக்காவில் ஒரு 9 வயது ஆப்பிரிக்க அமெரிக்க சிறுமி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், தனது தாயையும் கொல்ல முயற்சித்ததாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ரோசெஸ்டர் பொலிஸார் அச்சிறுமியை கட்டுப்படுத்தி கைகளில் விலங்கிட்டு அழைத்து செல்ல முற்பட்டனர்.
அப்போது, மிகவும் கத்தி கூச்சலிட்டு காருக்குள் ஏற மறுத்த அந்த சிறுமியின் முகத்தில் பொலிசார் பெப்பர் ஸ்பிரேவை அடித்துள்ளனர். அதனை அடிப்பதற்கு முன்பு, அச்சிறுமி அவர்களிடம் “என் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடிக்காதீங்க., ப்ளீஸ் வேண்டாம் ப்ளீஸ்.,” என கெஞ்சி கதறியுள்ளார்.
இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் பொலிஸின் பாடி கேமில் பதிவாகியுள்ளது. அதனை இப்போது ரோசெஸ்டர் பொலிஸார் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, இணையாத்தில் மிகவும் வைரலானது.
பொலிசாரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த சம்பவம் அமெரிக்கா
வில் பல பகுதிகளில் போராட்டங்களை தூண்டியுள்ளது.
அடையாளம் வெளியிடப்படாத அந்த சிறுமி, பெரிய மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது அவரை தற்கொலை மற்றும் கொலை செய்யும் அளவிற்கு தூண்டியது என்றும் கூறப்படுகிறது.
சம்பவத்தில் இருந்த காவல்துறையினர், அவரைக் கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல் இப்படி செய்ததாக காரணம் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ரோசெஸ்டர் மேயர் லவ்லி வாரன் ஒரு குழந்தைக்கு எதிராக மிளகாய் ஸ்பிரேவை பயன்படுத்திய பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்துள்ளார்.