பிரையன் லாரா ஒரு சகாப்தம் இங்கிலாந்துக்கு எதிராக அவர் குவித்த 400 ஓட்டங்கள் என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு சாதனை என தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவர் வியான் முல்டர் தெரிவித்துள்ளார்.
கிரிக்பஸ் இணையதளத்தில் அளித்த செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் தலைவர் வியான் முல்டர், 334 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 367 ஓட்டங்களை குவித்திருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரைன் லாராவின் 400 ஓட்டங்கள் என்ற உலக டெஸ்ட் சாதனையை முறியடிக்க 34 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 626 ஓட்டங்களை பெற்றிருந்தது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டார்.
இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் முல்டருக்கு லாராவின் வரலாற்று சாதனையை முறியடிக்கும் தனிப்பட்ட வாய்ப்பு இருந்தது.
எனினும் அணியின் வெற்றியையும் லாராவின் மகத்தான சாதனை மீதான மரியாதையையும் முன்னிறுத்தி இந்த முடிவை எடுத்ததாக முல்டர் விளக்கமளித்துள்ளார். இது உலகளவில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
முல்டர், கிரிக்பஸ் இணையதளத்தில் அளித்த செவ்வியில், “பிரையன் லாரா ஒரு சகாப்தம் – இதை நாம் மறுக்கவே முடியாது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் குவித்த 400 ஓட்டங்கள் என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு சாதனை.
அத்தகைய மகத்தான வீரரின் வசம் அந்த சாதனை இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மீண்டும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதே முடிவைத்தான் எடுப்பேன்.
ஏனெனில், அந்த பெருமைக்குரிய வீரர் தன்வசம் வைத்திருக்கும் ஒரு உலக சாதனையை பாதுகாக்க உதவுவது, வீரர்களுக்கு இடையேயான பரஸ்பர மரியாதையையும், உணர்வையும் வெளிப்படுத்துவதாகும்,” என்று முல்டர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றி முக்கியம் என்றும், ஜிம்பாப்வே அணியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து போட்டியை முடிக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் தெரிவித்தார்.
இந்த முடிவு முல்டரின் விளையாட்டு மனப்பான்மையையும், அணி உணர்வையும் வெளிப்படுத்தியது. அவரது 367 ஓட்டங்களை, தென்னாப்பிரிக்க வீரர்களில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஓட்டங்கள் என்ற ஹசிம் ஆம்லாவின் (311 ஓட்டங்கள்) சாதனையை முறியடித்தது.
மேலும் அணியின் தலைவராக அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற விராட் கோலியின் (256 ஓட்டங்கள்) சாதனையையும் முறியடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.