பாதுகாப்புக் கோரும் எதிர்க்கட்சி: ஜனநாயகத்துக்கு மரண அடி

0
57

அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சியின் குழுவொன்று தயாராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தன் உயிருக்கு அச்சுறுத்தலாகும் வகையில் யாரோ ஒருவர் மூலம் உணவில் விஷம் கலந்திருந்ததாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உயிருக்கும் அச்சுறுத்தல் உருவாக முடியும் என்ற அச்சத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவருக்கு முன்வைக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் அண்மையில் தெரிவித்த கருத்து மிகத் தீவிரமானது எனவும் இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

அரசாங்கத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் வெளிப்படுத்தும் கடமை அமைச்சர்களுக்கு உண்டு எனவும் அவ்வாறு வெளிப்படுத்தும் அமைச்சர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமெனில் அது ஜனநாயகத்துக்கு விழும் ஒரு மரண அடி எனவும் டலஸ் அழகப்பெரும அறிவித்தல் ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணைந்து எதிர்வரும் வாரங்களில் கையொப்பமிட்டு ஆவணமொன்றை அதிகாரிகளுக்கு வழங்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நாளை (07) நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.