தி.மு.கவின் எதிர்ப்பையும் மீறி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது: பாஜகவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதிலடி

0
68

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க.வை குறிவைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை மீட்க கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக அரசு செய்தது என்ன, தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபடுவதையும், சித்ரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன், விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மௌனகுருவாக இருப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்,

கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால், கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது.

அதன் பிறகு பல முறை மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு கச்சத்தீவு விவகாரத்தில் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கும் திமுகவுக்கு தேர்தல் காலங்களில் மட்டுமே அதன் ஞாபகம் வருவது விந்தை. கச்சத்தீவு விஷயத்தில் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம்.

திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை கடற்படையினரால் 80 இற்க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற திமுக எடுத்த நடவடிக்கை வெறும் மௌனமே. கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, திமுக அன்றும் மவுனமாகத்தான் இருந்தது. அவர்களை பத்திரமாக மீட்டது பிரதமர் மோடி தான்.

மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். ஒட்டுமொத்த பாரத நாடும், நமது மீனவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து,தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் ஸ்டாலின் சுயபரிசோதனை செய்ய வேண்டியம் நேரம் இது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

“தமிழக மக்களுக்கு உண்மை வரலாறு நன்றாகத் தெரியும். திமுக அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. ஒரு மாநில அரசால் நாட்டின் ஒரு பகுதியை வேறு நாட்டுக்கு விட்டுக்கொடுக்க முடியும் என்று நம்பும் அளவுக்கு பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க.வை குறிவைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பொய் பேசுகிறார். தமிழக மீனவர்களை இந்தியர்களாகக் கருதவில்லையா?

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவது மத்திய அரசு ஏன் நிறுத்தவில்லை. இந்திய மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து தேசியமயமாக்குவதாக அறிவித்த இலங்கையை இந்திய அரசு ஏன் வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை“ என கேள்வி எழுப்பியுள்ளார்.