விண்ணில் பாயவுள்ள அக்னி பான் ரொக்கெட்: பயணத் திகதி அறிவிப்பு

0
70

ஸ்டார்ட்-அப் தயாரித்த ‘அக்னிபான்’ ரொக்கெட் வருகிற 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வேதேச விண்வெளித்துறையில் இந்தியா தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது.

நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்ட சந்திரயான்3 விண்கலம், சர்வதேச நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திசை திருப்பியிருந்தது.

அதேபோல, இதனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், கருந்துளையை ஆய்வு செய்ய ஏவப்பட்ட எக்ஸ்போசாட் விண்கலம் ஆகியவை இந்தியாவுக்கு விண்வெளி துறையின் மீது இருக்கும் ஆர்வத்தை உலக அளவில் திரையிட்டுக்காட்டியது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தற்போது விண்வெளி துறையில் தனியார் அனுமதிக்கப்படுவர் என்கிற மத்திய அரசின் முடிவையடுத்து, சென்னை ஐஐடியின் அக்னிகுல் ஸ்டார்ட் அப் நிறுவனம் ரொக்கெட்டினை வடிவமைத்து வருகிறது. இந்நிலையில் “அக்னிபான் ரொக்கெட்” வருகிற 22 ஆம் திகதி விண்ணில் ஏவப்படும் என்று ஸ்டார்ட்-அப் அறிவித்துள்ளது.

ரொக்கெட் உலகின் முதல் ‘3டி பிரிண்டட்’ வகையை சேர்ந்த, செயற்கைகோள் எதுவும் இன்றி, சோதனை முயற்சியாக இந்த ரொக்கெட் ஏவப்படுவதுடன், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் முதல் ரொக்கெட் இதுவாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்தியாவின் முதல் அரை ‘கிரையோஜெனிக்’ எந்திரத்தை ”அக்னிபான் ரொக்கெட்” கொண்டுள்ளது. 18 மீட்டர் உயரமும், 1.3 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ரொக்கெட் 100 கிலோ எடையுள்ள செயற்கைகோள்களை 700 கிலோ மீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.