இலங்கை விவசாயத் துறைக்கு அமெரிக்கா பெரும் ஆதரவு: உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த கொழும்பில் உள்ள தூதுவர் உறுதி

0
39

இலங்கையின் விவசாயத் துறைக்கு அமெரிக்க விவசாயத் திணைக்களம் வழங்கும் ஆதரவு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளரான அலெக்சிஸ் டெய்லர், அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளை நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்தித்தனர்.

இலங்கையின் விவசாய அபிவிருத்தி

அதிகரித்த உணவுப் பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய சவால்களுக்கு எதிராக மீண்டெழுவதை அதிகரிப்பதற்கு இலங்கையின் விவசாய அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அமெரிக்காவின் ஆதரவு இதன்போது கோடிட்டுக்காட்டப்பட்டது.

சுற்றுச் சூழலுகேற்ற மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை இணைப்புகள் ஊடாக உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய சவால்களுக்கு எதிராக மீண்டெழும் தன்மையினை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் 2024 Food for Progress எனும் முன்முயற்சியில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டது.

பாற்பண்ணையாளர்களுக்கு பயிற்சி

இலங்கையில் 15,000 இற்கும் மேற்பட்ட பாற்பண்ணையாளர்கள் தங்கள் பாலுற்பத்தியை மேம்படுத்துவதற்கு உதவி செய்த 27.5 மில்லியன் டொலர் பெறுமதியுடைய மார்கெட் ஓரியென்டட் டெய்ரி (Market-Oriented Dairy) எனும் செயற்திட்டம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

எரிசக்தி நுகர்வினைக் குறைக்கும் வகையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன நுகர்வு உத்திகள் தொடர்பாக விரிவான பயிற்சியினை வழங்குவதன் மூலம் பாற்பண்ணையாளர்கள் காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கமடைவதை மேம்படுத்துவதே அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் பாற்பண்ணை செயற்திட்ட இலக்காக காணப்படுகின்றது.

மாணவர்களுக்கான நாளாந்த உணவு

மேலும், கல்வி அமைச்சின் பங்காண்மையுடன் சேவ் த சில்ட்ரன் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் McGovern-Dole செயற்றிட்டமானது 2018 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலுமுள்ள சுமார் 100,000 ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்த உணவை வழங்கியுள்ளது.

பதுளை, கொழும்பு, கிளிநொச்சி, மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு உணவு வழகப்படுகின்றது.

ஏற்பாடுகளை மேலும் அதிகரிப்பதற்காக 32.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஐந்தாண்டு செயற்திட்ட விரிவாக்க நடவடிக்கையிலும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எமது பரந்த இலக்கின் ஒரு பகுதியாக அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் ஊடாக இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.

இலங்கையின் தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள சுமார் 200,000 மாணவர்களுக்கு உணவு வழங்குவதே இந்த செயற்றிட்டத்தின் இலக்காக குறிப்பிடப்பட்டுள்ளது.